மேலும் 3 புலிக்குட்டிகள் சாவு


தினத்தந்தி 20 Sept 2023 5:15 AM IST (Updated: 20 Sept 2023 5:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே வனப்பகுதியில் மேலும் 3 புலிக்குட்டிகள் இறந்து உள்ளன. இந்த தொடர் சம்பவத்தால் வன ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி அருகே வனப்பகுதியில் மேலும் 3 புலிக்குட்டிகள் இறந்து உள்ளன. இந்த தொடர் சம்பவத்தால் வன ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

புலிக்குட்டிகள் நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதிகளை கொண்டது. இங்கு காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள், சிறுத்தைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. சமீப நாட்களாக புலிகள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி ஊட்டி வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட சீகூர் வனச்சரக எல்லையான சின்னக்குன்னூர் பெந்தட்டி அருகில் உள்ள வனப்பகுதியில் 4 புலிக்குட்டிகள் நடமாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து வனத்துறையினர் குழு அமைத்து புலிக்குட்டிகளை தேடி வந்தனர்.

இதில் கடந்த 17-ந் தேதி சின்னக்குன்னூர் வனப்பகுதியில் ஒரு ஆண் புலிக்குட்டி இறந்து கிடப்பது தெரியவந்தது. பின்னர் கால்நடை டாக்டர்கள் புலிக்குட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்து, ஆய்வுக்காக உடல் உறுப்புகளை கோவைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், தாய்ப்பால் கிடைக்காததால் புலிக்குட்டி இறந்தது தெரியவந்தது.

மேலும் 3 குட்டிகள் சாவு

இதையடுத்து மற்ற 3 புலிக்குட்டிகள் மற்றும் தாய்ப்புலியை வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் சின்ன குன்னூர் வனப்பகுதியில் ஏற்கனவே புலிக்குட்டி இறந்து கிடந்த பகுதியில், மேலும் 2 பெண் புலிக்குட்டிகள் இறந்து கிடந்ததை நேற்று வனத்துறையினர் கண்டறிந்தனர். அங்கு சற்று தொலைவில் ஒரு பெண் புலிக்குட்டி சோர்வான நிலையில் உயிருடன் மீட்கப்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட வன அதிகாரி கவுதம், ஊட்டி வடக்கு வனச்சரகர் (பொறுப்பு) சசிகுமார், முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர்கள் ராஜேஷ், ரேவதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இறந்து கிடந்த 2 புலிக்குட்டிகளின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பகுதியில் எரிக்கப்பட்டது. தொடர்ந்து புலிக்குட்டிகளின் உடல் உறுப்புகள் ஆய்வுக்காக கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட புலிக்குட்டிக்கு சிகிச்சை அளித்து, கூண்டில் வைத்து வனத்துறையினர் பராமரித்து வந்தனர். அதுவும் சிகிச்சை பலனின்றி இறந்தது.

4 குழு அமைப்பு

இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி கவுதம் கூறியதாவது:-

சின்ன குன்னூர் வனப்பகுதியில் கடந்த 14-ந் தேதி முதல் 4 புலிக்குட்டிகள் சுற்றித்திரிந்ததாக கிடைத்த தகவலின் பேரில், வனத்துறையினர் புலிக்குட்டிகளை தேடி வந்தனர். இதில் ஒரு ஆண், 2 பெண் புலிக்குட்டிகள் இறந்து கிடந்தது. மேலும் ஒரு பெண் புலிக்குட்டி மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த புலிக்குட்டியும் உடலில் நீர்ச்சத்து இல்லாததால் இறந்து உள்ளது. இவை அனைத்தும் பிறந்து 2 மாதம் இருக்கலாம்.

மேலும் புலிக்குட்டிகள் தனியாக இருந்ததால் தாய் புலியின் நிலையை அறிவதற்காக, 40 பேர் அடங்கிய 4 குழு அமைக்கப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் புலிக்குட்டிகள் இறந்து கிடந்த பகுதியில் கடந்த 18-ந் தேதி ஒரு மானின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. எனவே, மான் கிடந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி புலி நடமாட்டம் உள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story