வாலிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
வாலிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பீளமேடு
கோவை சின்னியம்பாளையம் காவேரிநகரை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மகன் புவனேஷ் (வயது 23). இவரை சின்னியம்பாளையம் அருகே ஆர்.ஜி.புதூர் குட்டை பகுதியில் 7 பேர் கும்பல் கத்தியால் குத்திக்கொலை செய்தது.
அதை தடுக்க முயன்ற புவனேசின் நண்பர்கள் மணிகண்ட பிரபு (19), சந்தோஷ் (20) ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. அவர்கள் 2 பேரும் காயத்துடன் உயிர் தப்பினர்.
இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில் புவனேஷ், நந்தகுமார், சந்தோஷ் ஆகியோருக் கும், டீச்சர்ஸ்காலனியை சேர்ந்த மாதவன் (20), ஜெகத் ஹரி (19), தினேஷ் (20) மற்றும் 16, 17 மற்றும் 18 வயதுடைய சிறுவர்கள் உள்பட 7 பேருக்கும் பல்வேறு பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இதனால் ஆத்திரத்தில் புவனேசை ஜெகத் ஹரி, மாதவன், சிறுவர்கள் உள்பட 7 பேர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக நேற்று முன்தினம் மாதவன் மற்றும் 16 வயது சிறுவன் ஒருவனை பீளமேடு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தினேஷ், 17 மற்றும் 18 வயது சிறுவா்கள் 2 பேர் என மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.