விவசாயி கொலை வழக்கில் சிறுவன் உள்பட மேலும் 3 பேர் கைது
விவசாயி கொலை வழக்கில் சிறுவன் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
குன்னம்:
விவசாயி கொலை
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மாக்காயிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயி. இவர் வெளியூரில் இருந்து வந்த தனது மகளை அழைத்து வர அரியலூருக்கு சென்றார். வழியில் அவரை மறித்த 7 பேர் கொண்ட கும்பல், இரும்பு ஆயுதங்களால் அவரை தாக்கி கொலை செய்தனர். இது குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ராமச்சந்திரன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் மாக்காயிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த சிவசாமி, நடராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
3 பேர் கைது
இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த மாக்காயிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த நடராஜனின் மகன் செல்லதுரை(வயது 21), பாண்டியனின் மகன் பாலமுருகன்(21) மற்றும் 16 வயது சிறுவன் என 3 பேரை நேற்று குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் கைது செய்தார். பின்னர் அவர்கள் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெரம்பலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.