சாராயம் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் சாராயம் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாராயம் பதுக்கல்
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் உத்தரவின் பேரில் போலீசார் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்போர் மற்றும் கடத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தொப்பப்பட்டி பகுதியில் நித்யானந்த் (வயது30) என்பவர் தனது வீட்டில் சாராயம் பதுக்கி வைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையில் அங்கு விரைந்து சென்ற போலீசார், 40 லிட்டர் சாராயம், 130 லிட்டர் சாராய ஊறல் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நித்யானந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 பேர் கைது
இதேபோல் கொல்லிமலையில் உள்ள செங்கரை பகுதியில் கள்ளச்சாராயம் வைத்திருப்பதாக செங்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வேலிக்காடு பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் (வயது 44) மற்றும் ஜெயக்குமார் (27) ஆகியோர் கள்ளச்சாராயம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து 4 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் ஒரு நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்தனர்.