ஆந்திராவில் இருந்து சேலத்துக்குபஸ்சில் கடத்திய 21 கிலோ கஞ்சா பறிமுதல்


ஆந்திராவில் இருந்து சேலத்துக்குபஸ்சில் கடத்திய 21 கிலோ கஞ்சா பறிமுதல்
x

ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு பஸ்சில் கடத்திய 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

சேலம்

ஓமலூர்

கஞ்சா கடத்தல்

ஆந்திர மாநிலத்தில் இருந்து சேலம் மாவட்டம் ஓமலூருக்கு பஸ்சில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜன், கலால் சப்-இன்ஸ்பெக்டர் தேவி மரியா செல்வம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ஓமலூர் பஸ் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தர்மபுரி பஸ்கள் நிற்கும் பகுதியில் சாக்கு பையுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

பஸ்சில் கடத்தல்

போலீசார் அவர்கள் 2 பேரையும் ஓமலூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர்கள் சங்ககிரி செட்டிப்பட்டியை சேர்ந்த பூபதி ராஜா (வயது 23), புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பூபதி (21) என்பது தெரியவந்தது.

இவர்கள் 2 பேரும் சங்ககிரி செட்டிப்பட்டி தெருவை சேர்ந்த ராஜா என்கிற ஆனந்தராஜிடம் (45) அடிக்கடி பணம் பெற்று வந்துள்ளனர். இதனால் அவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்தால், ஆயிரக்கணக்கில் பணம் தருவதாக அவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து பூபதி ராஜா, பூபதி ஆகியோர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து அடிக்கடி கஞ்சா கடத்தி வந்துள்ளனர்.

3 பேர் கைது

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயவாடா சென்ற அவர்கள், அங்கிருந்து 21 கிலோ கஞ்சாவை பஸ் மூலம் கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக நேற்று முன்தினம் ஓமலூருக்கு கடத்தி வந்துள்ளனர். அங்கு வந்த ஆனந்தராஜ், அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பெற்று கொண்டு, மீதமுள்ள 15 கிலோ கஞ்சாவை பஸ் நிலையத்துக்கு வரும் நபரிடம் கொடுக்கும் படி, கூறி சென்றுள்ளார்.

அதற்காக பூபதி ராஜா, பூபதி ஓமலூர் பஸ் நிலையத்தில் நின்றபோது, போலீசில் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் சங்ககிரி மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்த ஆனந்தராஜை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story