தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
வந்தவாசியில் தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த எறும்பூர் அண்டித்தாங்கலைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 46). இவர் வந்தவாசி தேரடியில் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் சாலையோரம் செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 20-ந் தேதி தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்யும் செம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனிடம் தள்ளுவண்டியை சற்று தள்ளி நிறுத்துமாறு ஏழுமலை கூறியுள்ளார்.
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ஏழுமலை, நீ பழவியாபாரம் செய்வதற்கு எதிரில் குளிர்பான கடை வைத்துள்ள கோபால்தான் காரணம் என்று கூறி கோபாலை அசிங்கமாக திட்டியதாக கூறப்பபடுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கோபாலின் மகனான வந்தவாசி பிராமணர் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (29), அதே தெருவைச் சேர்ந்த அருள் (35), வாணியர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி (45) ஆகிய 3 பேரும் சேர்ந்து ஏழுமலையை தாக்கி அருகிலிருந்த மழைநீர் கால்வாயில் தள்ளி விட்டு, ஆபாசமமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த ஏழுமலை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின்பேரில் விக்னேஷ், அருள், சுப்பிரமணி ஆகியோர் மீது வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவுசெய்து 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.