சொட்டுநீர் பாசன குழாய்கள், மின் மோட்டார் திருடிய 3 பேர் கைது


சொட்டுநீர் பாசன குழாய்கள், மின் மோட்டார் திருடிய 3 பேர் கைது
x

கிருஷ்ணராயபுரம் அருகே சொட்டுநீர் பாசன குழாய்கள், மின் மோட்டாரை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்

திருட்டு

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கருப்பத்தூர் ஊராட்சி, வரகூர் பகுதியை சேர்ந்தவர் ராமராஜன்(வயது 33). இவர் தனது தோட்டத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து விவசாய சாகுபடி செய்து வந்துள்ளார். சாகுபடி முடிந்த பின் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள சொட்டுநீர் குழாய்களை ஒன்று சேர்த்து கிணற்றின் அருகே வைத்துள்ளார். அதனை கடந்த 26-ந் தேதி இரவு மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

அதேபோல் வீரியபாளையம் ஊராட்சி, வெள்ளைய கவுண்டன்பட்டியை சேர்ந்த சின்னையன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள நீர் மின் மோட்டாரையும் மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில் வரகூர் பகுதியில் சந்தேகத்தின்பேரில் நின்றுகொண்டிருந்த சரக்கு வேன் குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தில்லைக்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். இதில் அந்த வேனில் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்த அண்ணார்(38), வேங்கம்பட்டி கிருஷ்ணமூர்த்தி(39), பிரசாத்(23) ஆகிய 3 பேர் இருந்தனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மேற்கண்ட சொட்டு நீர் குழாய்கள், மின் மோட்டாரை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து சொட்டு நீர் குழாய்கள், மின் மோட்டார் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story