தி.மு.க.பிரமுகர் வீட்டில் ஆடு திருடிய 3 பேர் கைது
கடலூர் தி.மு.க.பிரமுகர் வீட்டில் ஆடு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் தேவனாம்பட்டினம் பீச் ரோட்டை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் மகன் அகஸ்டின் பிரபாகரன் (வயது 45). தி.மு.க. மாநகர துணைச்செயலாளர். இவர் தனது வீட்டில் 20 ஆடுகளை வளர்த்து வந்தார். அதில் 9 ஆடுகளை காணவில்லை. இதை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுபற்றி அகஸ்டின்பிரபாகரன் கடலூர் தேவனாம்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று திருப்பாதிரிப்புலியூர் ரெயில்வே மேம்பாலம் அருகில் 3 பேர் சந்தேகமான முறையில் நிற்பதாக தேவனாம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் புருகீஸ்பேட்டையை சேர்ந்த மணி மகன் தர்மேந்திரன் (25), வசந்தராயன்பாளையத்தை சேர்ந்த சங்கர் மகன் சந்தோஷ்குமார் (22), ஆலைக்காலனி தணிகாசலம் மகன் நேதாஜி (23) ஆகிய 3 பேர் என்றும், அவர்கள் தான் ஆடுகளை திருடியதும் தெரிந்தது. தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.