நகை அடகு கடைக்காரரிடம் மோசடி செய்ய முயன்ற 3 பேர் கைது
ஜெயங்கொண்டத்தில் நகை அடகு கடைக்காரரிடம் மோசடி செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம் பஸ் நிலைய ரோட்டில் நகை அடகு கடையை நடத்தி வருபவர் அணில் ஜெயின் (வயது 33). இவரது கடைக்கு பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த துரை (63) என்பவர் அடிக்கடி தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை அடமானமாக வைத்து பணம் பெற்று செல்வார். இந்தநிலையில் நேற்று துரை தனது நண்பர்களான சேலம் மாவட்டம் மணியனூரை சேர்ந்த தர்மலிங்கம் (70), அரியலூர் கணபதி நகரை சேர்ந்த சரவணன் (51) ஆகியோருடன் 4 ஜோடி வெள்ளி கொலுசுகளை அடமானம் வைத்து பணம் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த கொலுசுகளை அணில் ஜெயின் சோதனை செய்து பார்த்தபோது அது வெள்ளி கொலுசு இல்லை என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து அணில் ஜெயின் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடகு கடைக்காரரிடம் மோசடி செய்ய முயன்ற துரை, தர்மலிங்கம், சரவணன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.