வாலிபர் கொலையில் 3 பேர் கைது


வாலிபர் கொலையில் 3 பேர் கைது
x

திசையன்விளையில் நடந்த வாலிபர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளையில் நடந்த வாலிபர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் கொலை

திசையன்விளையை அடுத்த அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். செருப்பு தைக்கும் தொழிலாளி. இவருடைய மகன் முத்தையா (வயது 19). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்குள்ள காட்டுப்பகுதியில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து அவரது தந்தை கன்னியப்பன் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். போலீசார் முத்தையாவின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் கடைசியாக உவரியை சேர்ந்த அவரது நண்பர் கார்த்தி என்பவரிடம் பேசியது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதையடுத்து போலீசார் கார்த்தியை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-

சம்பவத்தன்று கார்த்தியும், முத்தையாவும் அங்குள்ள காட்டுப்பகுதியில் மது அருந்தி உள்ளனர். அப்போது மதுபோதையில் அங்கு வந்த அப்புவிளை கக்கன் காலனியை சேர்ந்த சுரேஷ் (19), அவரது உறவினர்கள் மதியழகன் (31), பிரகாஷ் (31) ஆகியோர் முத்தையாவிடம் சுரேசின் தங்கையை கேலி செய்ய நீ யார்? என்று கேட்டு தகராறு செய்துள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து முத்தையாவை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். கத்திக்குத்தின்போது அதை தடுக்க முயன்ற கார்த்திக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

3 பேர் கைது

இதையடுத்து சுரேஷ், மதியழகன், பிரகாஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, இந்த கொலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முத்தையாவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story