டாஸ்மாக் பாரின் கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கிய ரவுடி உள்பட 3 பேர் கைது


டாஸ்மாக் பாரின் கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கிய ரவுடி உள்பட 3 பேர் கைது
x

டாஸ்மாக் பாரின் கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கிய ரவுடி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

மது கேட்டு தகராறு

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையின் அருகில் உள்ள பாரில் மண்ணச்சநல்லூர் நடுத்தெருவை சேர்ந்த பிரகாஷ் (வயது 38) என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 4-ந்தேதி மகாவீர் ஜெயந்தியையொட்டி மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டு இருந்ததால், அந்த டாஸ்மாக் கடைக்கும், அருகில் உள்ள பாருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் 4-ந்தேதி நள்ளிரவு 11.30 மணி அளவில் 3 வாலிபர்கள் அங்கு வந்துள்ளனர். மதுக்கடை அடைக்கப்பட்டு இருந்த நிலையில், பார் முன் நின்று கொண்டிருந்த பிரகாசிடம் அவர்கள் மதுபாட்டில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் இன்று கடை விடுமுறை நாளை வாருங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் பிரகாசை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், பாரில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் அடித்து நொறுக்கினர்.

ரவுடி உள்பட 3 பேர் கைது

இது குறித்து பிரகாஷ் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மதுகேட்டு தகராறு செய்து கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்கியது திருச்சி சிந்தாமணி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் அபிஷேக் (19), கொசமேட்டு தெருவை சேர்ந்த கோபால் என்பவரின் மகன் சிவகுரு (22), மண்ணச்சநல்லூரை சேர்ந்த மணிகண்டன் (19) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் சிவகுரு ரவுடி பட்டியலில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story