வெவ்வேறு விபத்தில் 3 பேர் பலி

திண்டிவனம் அருகே நடந்த வெவ்வேறு விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் 9 போ் காயம் அடைந்தனர்.
திண்டிவனம்,
டிராக்டர் மோதியது
திண்டிவனம் அடுத்த கம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் முருகன் (வயது 40). இவர் கோனேரிக்குப்பத்தில் இருந்து டிராக்டரில் வேப்பமர கட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒலக்கூரில் உள்ள எடைமேடையில் எடை போட சென்றார். பின்னர், அங்கிருந்து பாங்கொளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதே போல் திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தை சேர்ந்தவர் பூமிநாதன் மகன் நாகராஜ் (54). இவர் ஈச்சேரி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
9 பேர் காயம்
திண்டிவனம் அடுத்த சிங்கனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனிக்கு ஆட்டோவில் 9 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த சிங்கனூர் பகுதியை சேர்ந்தவர்கள் கவிதா (32), ஜெயா (46), பப்பிதா (29), செல்வி (46), மகாலட்சுமி (38), மஞ்சுளா (37), சத்யா (34), பூதேரி பகுதியை சேர்ந்த சசிகலா (30) உள்பட 9 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேற்கண்ட விபத்துகள் குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெல்டர்
திண்டிவனம் அடுத்த செம்பாக்கம் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் மணி மகன் ராமதாஸ் (34). வெல்டர். இவர் திண்டிவனத்தில் வெல்டிங் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். ஊரல் பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது தனியார் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.