வெவ்வேறு விபத்துகளில் போக்குவரத்து போலீஸ்காரர் உள்பட 3 பேர் சாவு


வெவ்வேறு விபத்துகளில் போக்குவரத்து போலீஸ்காரர் உள்பட 3 பேர் சாவு
x

வெவ்வேறு விபத்துகளில் போக்குவரத்து போலீஸ்காரர் உள்பட 3 பேர் இறந்தனர்.

திருச்சி

வெவ்வேறு விபத்துகளில் போக்குவரத்து போலீஸ்காரர் உள்பட 3 பேர் இறந்தனர்.

போலீஸ்காரர்

திருச்சி நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 45). இவர் திருச்சி மாநகர காவல்துறையில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் மன்னார்புரம் பகுதியில் பணியில் இருந்தார்.

அப்போது, என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான தீரன் நகரை சேர்ந்த அகிலன் (20), அவரது நண்பர் மதன் பிரசாத் (19) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அப்போது அவர்களின் மோட்டார் சைக்கிளிலிருந்து ஹெல்மெட் கீழே விழுந்துள்ளது. இதனால் அகிலன் நடுரோட்டில் வண்டியை நிறுத்தியதாக தெரிகிறது.

சாவு

இதைப்பார்த்த போலீஸ்காரர் ஸ்ரீதர் அவர்களுக்கு உதவி செய்ய சென்ற போது, மன்னார்புரத்தில் இருந்து வந்த ஒரு கார் வேகமாக மோட்டார் சைக்கிள் மீதும், போலீஸ்காரர் மீதும் மோதியது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த போலீஸ்காரர் ஸ்ரீதர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடைய உடல் பிரேதபரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடைய உடலுக்கு போலீசார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் போலீஸ் மரியாதையுடன் அவருடைய இறுதிச்சடங்கு நடைபெற்றது.

மற்றொரு விபத்தில் காயம் அடைந்தவர் சாவு

அரியலூர் மாவட்டம் வெள்ளூர் ராயபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சித்ரா (38). இவர் புள்ளம்பாடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 31-ந்தேதி திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்தார். தேர்வு முடிந்தவுடன் அவர் தன்னுடன் படித்து வரும் செல்வராஜ் என்பவருடன் மொபட்டில் வீட்டுக்கு சென்றார்.

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன் நகர் அருகே சென்றபோது, கல்கண்டார்கோட்டையை சேர்ந்த மதியழகன் (45) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சை்கிள் மோதியது. இந்த விபத்தில் சித்ரா பரிதாபமாக இறந்தார். மதியழகன் படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியழகன் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மினி பஸ் மோதிமுதியவர் பலி

சிறுகனூர் அருகே உள்ள சனமங்கலம் கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் சுப்பு (70). விவசாயியான இவர் நேற்று எம். ஆர். பாளையத்தில் இருந்து சனமங்கலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுப்பு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி பஸ் டிரைவர் தெரணி, நடுத்தெருவை சேர்ந்த குமார் (45) என்பவரை கைது செய்தனர்.


Next Story