ெவவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.
வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள்.
கூலி தொழிலாளி
நாமக்கல் மாவட்டம் வேவலகவுண்டம்பட்டி அருகே தொட்டிபம்பாளையம் தளிகை பகுதியைச் சேர்ந்தவர் சென்னப்பன் (வயது 58), கூலி தொழிலாளியான இவர் தொட்டியம்பாளையத்தில் இருந்து நறுவலூர் நோக்கி தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
சுங்ககாரம்பட்டியில் இருந்து நறுவலூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு வளைவில் வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், சென்னப்பன் சென்ற மொபட்டும் மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சென்னப்பனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சென்னப்பன் பரிதாபமாக இறந்தார். எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தவர் லேசான காயத்துடன் தப்பினார். விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பெண் சாவு
பள்ளிபாளையம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபால் மனைவி தனபாக்கியம் (வயது 46). இவர், நேற்று காலை குப்பை கொட்டுவதற்காக ஒன்பதாம்படி அருகில் ரோட்டை கடந்து நடந்து சென்றார். அப்போது பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற ஒரு மொபட் தனபாக்கியம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தனபாக்கியத்தை அக்கம் பக்கத்தினர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தனபாக்கியம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். விபத்து குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி மொபட் ஓட்டி வந்த பாபு (43) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மகள் வீட்டுக்கு...
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரை சேர்ந்த கூலி தொழிலாளி பாலையா (வயது 50). இவர், பொங்கல் பண்டிகையையொட்டி மோகனூரை அடுத்த மணியங்காளிப்பட்டியில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர், மோகனூர் மணியங்காளிப்பட்டி சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த பாலையாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பாலையா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.