புதுமாப்பிள்ளை தற்கொலைக்கு போலீஸ் அதிகாரிகள் உள்பட 3 பேர் காரணம் கலெக்டர் அலுவலகத்தில் தாயார் பரபரப்பு மனு


புதுமாப்பிள்ளை தற்கொலைக்கு போலீஸ் அதிகாரிகள் உள்பட 3 பேர் காரணம் கலெக்டர் அலுவலகத்தில் தாயார் பரபரப்பு மனு
x

பூதப்பாண்டியில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்ததற்கு போலீஸ் அதிகாரிகள் உள்பட 3 பேரே காரணம் என்று கூறி அவருடைய தாயார், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

பூதப்பாண்டியில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்ததற்கு போலீஸ் அதிகாரிகள் உள்பட 3 பேரே காரணம் என்று கூறி அவருடைய தாயார், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

புதுமாப்பிள்ளை தற்கொலை

பூதப்பாண்டி மேலரத வீதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவருடைய மகன் வினிஷ் (வயது 30). இவருக்கும், இவரது உறவினர் பெண் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க நாள் குறிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் வினிஷ் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் வினிஷின் தாயார் உஷா நேற்று தன் உறவினர்களுடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனது மகன் வினிஷ் கேபிள் தொழில் செய்து வந்தான். வினிசுக்கும், அதே பகுதியை சேர்ந்த வக்கீல் ஒருவருக்கும் இடையே தொழில் ரீதியாக போட்டி இருந்தது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபரும், பூதப்பாண்டி போலீஸ் அதிகாரிகள் 2 பேரும் சேர்ந்து எனது மகனை போலீஸ் நிலையம் வரவழைத்து மிரட்டி இருக்கிறார்கள். அவனது தொழிலை விட்டுவிட்டு ஊரில் இருந்து ஓடிவிட வேண்டும் என்று கூறியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

பொய்வழக்கு

மேலும் சம்பந்தப்பட்ட வக்கீல் இரவு 12.30 மணி வரை போலீஸ் நிலையத்தில் இருந்து எனது மகனை ஒழித்து கட்டுவது குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி வினிஷ் மீது பொய் வழக்கு போட்டு 15 நாட்கள் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஜாமீனில் வெளியே வந்த நிலையில் சம்மந்தப்பட்ட 3 பேரும் சேர்ந்து மீண்டும் ஒரு பொய் வழக்கை பதிவு செய்து விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து வினிஷ் மீண்டும் ஜாமீனில் வெளியே வந்து திருநெல்வேலி கோர்ட்டில் காலை மற்றும் மாலையில் கையெழுத்து போட்டு வந்தார். இந்த நிலையில் 29-ந் தேதி கையெழுத்து போட்டு விட்டு வரும் வழியில் சம்பந்தப்பட்ட வக்கீல் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சேர்ந்து வினிசை மிரட்டி இருக்கிறார்கள். இதன் காரணமாக மரண வாக்குமூலம் எழுதி வைத்து விட்டு எனது மகன் தற்கொலை செய்துள்ளான். எனவே தற்கொலைக்கு காரணமாக இருந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மயங்கி விழுந்ததால் பரபரப்பு

முன்னதாக கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த உஷா திடீரென அங்கு மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையிலான போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் உஷாவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க அவருடைய உறவினர்கள் விடவில்லை. அவர்களே முதல் உதவி அளித்தனர். இதனால் போலீசாருக்கும், மனு அளிக்க வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story