திருநங்கைகள் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை


திருநங்கைகள் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 8 July 2023 3:15 AM IST (Updated: 8 July 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் வாலிபரை கொலை செய்த வழக்கில் திருநங்கைகள் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கோயம்புத்தூர்

கோவையில் வாலிபரை கொலை செய்த வழக்கில் திருநங்கைகள் உள்பட 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.


வீட்டை காலி செய்தனர்


கோவை நேருநகர் அருகே தொட்டிப்பாளையம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவருடைய மகன் இளங்கோவன் (வயது 30). இவர்களுடைய உறவினர் சவுந்தர் (23). இவர்கள் தங்கி இருந்த குடியிருப்பில் உள்ள வீடுகளின் வாடகையை பாக்கியலட்சுமி வசூல் செய்து உரிமையாளரிடம் வழங்கி வந்தார்.


அங்குள்ள ஒரு வீட்டில் ஆட்டோ டிரைவரான மைக்கேல் ஆண்டனி (27), திருநங்கைகளான ராகிணி (35), வெண்பா (26) ஆகியோர் வசித்து வந்து உள்ளனர். இவர்களால் அந்த குடியிருப்பில் வசித்து வந்த மற்றவர்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டதாக தொிகிறது. இதனால் அவர்களை வீட்டை காலி செய்யுமாறு பாக்கியலட்சுமி தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரும் வீட்டை காலிசெய்துவிட்டனர்.


கத்திக்குத்து


வீட்டில் குடியிருக்கும்போது பாக்கியலட்சுமிக்கும், ராகிணிக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் இருந்ததாக தெரிகிறது. அவரிடம் கடனாக பெற்ற பணத்தில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி ரூ.1,000 குறைவாக பாக்கியலட்சுமியின் மகன் இளங்கோவனிடம் ராகிணி கொடுத்து சென்றுள்ளார். இதை அறிந்த பாக்கியலட்சுமி, ராகிணியை செல்போனில் தொடர்பு கொண்டு மீதி பணத்தை கேட்டுள்ளார்.இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


இந்தநிலையில் மைக்கேல் ஆண்டனி தனது ஆட்டோவில் திருநங்கைகள் ராகிணி, வெண்பா ஆகியோருடன் பாக்கியலட்சுமி வீட்டிற்கு வந்து தகராறு செய்தனர். இதை அங்கிருந்த சவுந்தர், அவரது நண்பர்களான கிருபாகரன், அருண் ஆகியோர் தடுக்க முயன்றார். உடனே அவர்களை மைக்கேல் ஆண்டனி மற்றும் திருநங்கைகள் ஆகியோர் சேர்த்து தாக்கி கத்தியால் குத்தினர்.


ஆயுள் தண்டனை


இதில் சவுந்தருக்கு கத்திக்குத்து விழுந்தது. பின்னர் அங்கிருந்து மைக்கேல் மற்றும் திருநங்கைகள் தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த சவுந்தர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து பீளமேடு போலீசார் கொலை உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மைக்கேல் ஆண்டனி, ராகிணி, வெண்பா ஆகியோரை கைது செய்தனர்.


இந்த வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு வழக்குகள் விசாரணைக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.சசிரேகா, குற்றம்சாட்டப்பட்ட மைகேல் ஆண்டனி, ராகிணி, வெண்பா ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story