3 பேருக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது
3 பேருக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது
கோவை
கோவை உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்தவர் ராவுத்தர் கனி (வயது 25). இவர் வ.உ.சி. பூங்கா அருகே பானிபூரி கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வரும் ஆசாத் (32), சர்புதீன் (29) ஆகியோருக்கும் இடையே தொழில் போட்டி இருந்துள்ளது. இதனால் அவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆசாத், சர்புதீன் ஆகியோர் சேர்ந்து ராவுத்தர் கனியை கத்தியால் குத்தினார்கள். இதை தடுக்க வந்த ராவுத்தர் கனியின் அண்ணன் திப்புசுல்தான் (30), பக்கத்து கடை வியாபாரி மோஸ்கான் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
இதில் காயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசாத், சர்புதீன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.