மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயற்சி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை யார் நடத்துவது என்று ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை யார் நடத்துவது என்று ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த போட்டிகளை அந்தந்த ஊர் சார்பில் அமைக்கப்படும் விழா கமிட்டியினரே நடத்துவார்கள். ஆனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக, மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகிறது.
ஆனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை அவனியாபுரம் கிராம கமிட்டியே நடத்த வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இன்னும் சிலர், இந்த போட்டியை வழக்கம் போல் மாவட்ட நிர்வாகம்தான் நடத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.
எனவே கடந்த 2 தினங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அதில் ஏதும் உடன்பாடு ஏற்பட வில்லை. இந்த நிலையில் மீண்டும் நேற்று மாலை மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். அமைச்சர் மூர்த்தி முன்னிலை வகித்தார். அதில் அனைத்து துறை அலுவலர்கள், கிராம கமிட்டியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகள்
அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்த சிலர், இந்த பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு கோஷம் எழுப்பினர். கலெக்டர் மற்றும் அமைச்சருக்கு எதிராகவும் தொடர்ந்து முழக்கமிட்டனர். பின்னர் கூட்டத்தில் இருந்து அவர்கள் வெளியேறினர். அப்போது 3 பேர், கலெக்டர் கார் நிற்கும் பகுதி அருகே வந்து பெட்ரோலை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், அவர்களிடம் இருந்து பெட்ரோல் கேனை பறித்து, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். தொடர்ந்து அவர்களை அங்கிருந்து போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இதற்கிடையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகிறது. எனவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளை மாவட்ட நிர்வாகமே நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அவனியாபும் ஜல்லிக்கட்டு ஆண்டுத்தோறும் ெபாங்கல் பண்டிகை அன்று நடைபெறும். எனவே அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து செய்து வருகிறது.