ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற 3 பேர் கைது


ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற 3 பேர் கைது
x

வடலூரில் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

வடலூர்,

வடலூர் அருகே ராகவேந்திரா சிட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்துக்குள் சம்பவத்தன்று இரவு மர்மநபர்கள் புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.

அப்போது அங்கிருந்த அலாரம் ஒலித்ததால், மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிஓடி தலைமறைவாகினர். இது குறித்த தகவலின் பேரில் வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வடலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில்வே கேட் அருகில் சுற்றித்திரிந்த 3 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பி்டித்து விசாரணை நடத்தினர்.

கைது

இதில் அவர்கள் வடலூர் கணபதி நகரை சேர்ந்த முத்துசாமி மகன் பாலசுப்பிரமணியன் (வயது 56), இந்திரா நகர் மாற்றுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தாஸ் மகன் ராஜா (42), வடலூர் ஆர்.கே.நகரை சேர்ந்த சந்தானம் மகன் ராகவேந்திரன் (34) ஆகியோர் என்பது தெரிந்தது.

மேலும் இவர்கள் ராகவேந்திரா சிட்டியில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய இந்திரா நகர் மாற்றுக்குடியிருப்பை சேர்ந்த சண்முகம் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story