தூத்துக்குடியில் போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது


தூத்துக்குடியில் போதை மாத்திரைகள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் போதை தரக்கூடிய மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரோந்து

தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் உத்தரவின் பேரில், மத்தியபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி தெப்பக்குளம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காளிராஜ் மகன் சுப்புராம் (வயது 24), போல்பேட்டையைச் சேர்ந்த சஞ்ஜீவி மகன் குமரேசன் (55) என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய சோதனையில், சுப்புராம் போதை தரக்கூடிய 47 மாத்திரைகளும், குமரேசன் 39 மாத்திரைகளும் வைத்து இருந்தனர்.

பறிமுதல்

இதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்த 86 போதை தரும் மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 2 பேரும், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தன்னார்வலராக பணியாற்றி வரும் தெற்கு புதுத்தெருவைச் சேர்ந்த ரமேஷ் (57), தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மருந்தாளுநராக பணியாற்றி வரும் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த பதிபூரணம் என்ற ராஜாத்தி (43) ஆகியோரிடம் இருந்து வாங்கியது தெரியவந்தது. இந்த மாத்திரைகளை சாப்பிட்டால் போதை உண்டாகும் என்பதால், விற்பனை செய்வதற்காக வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் போதை தரும் மாத்திரைகளை விற்பனை செய்ததாக சுப்புராம், குமரேசன், ரமேஷ் ஆகிய 3 பேர் மீதும் மத்திய பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருந்தகங்களில் இதுபோன்ற போதை தரக்கூடிய மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையில்லாமல் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன எச்சரிக்கை விடுத்து உள்ளார்.


Next Story