சமுதாய நலக்கூடம் இடிந்து விழுந்து 3 வாலிபர்கள் பலி
மடத்துக்குளம் அருகே சமுதாயநலக் கூடம் இடிந்து விழுந்ததில் மழைக்கு ஒதுங்கி நின்ற வாலிபர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போடிப்பட்டி
மடத்துக்குளம் அருகே சமுதாயநலக் கூடம் இடிந்து விழுந்ததில் மழைக்கு ஒதுங்கி நின்ற வாலிபர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பலத்த மழை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளத்தை அடுத்த கொழுமம் பகுதியில் சமுதாய நலக்கூடம் உள்ளது. இந்த கட்டிடம் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த சமுதாயநலக்கூடத்தில் முக்கிய கோவில் பண்டிகை போன்றவற்றை கொண்டாடுவது வழக்கமாகும். மற்ற நேரங்களில் இந்த சமுதாய நலக்கூடம் பூட்டியிருக்கும். இந்த சமுதாய நலக்கூடத்தின் முன்புறம் உள்ள இடத்தில் பஸ் ஏறுவதற்காக காத்திருப்பவர்கள் மழை மற்றும் வெயிலுக்காக ஒதுங்குவது வழக்கமாகும். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே இந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணிக்கும் தொடர்ந்து மழை பெய்தது.
அப்போது உடுமலை பகுதிக்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் என 20-க்கும் மேற்பட்டோர் சமுதாயநலக்கூடத்தின் முன்பகுதியில் உள்ள மேற்கூரையின் கீழ் காலை 8.30 மணிக்கு பஸ்சுக்காக காத்து நின்றனர். அப்போது ஒரு தனியார் பஸ் வந்தது. அதில் அனைவரும் ஏறி சென்றனர். ஆனால் தொடர்நது மழை பெய்ததால் அடுத்து வரும் பஸ்சில் ஏறி வேலைக்கு செல்லலாம் என்று கொழுமம் பகுதியை சேர்ந்த மன்மதன் என்பவரது மகன் பெயிண்டரான முரளி ராஜா (வயது 35), அதே ஊரை சேர்ந்த பாபு என்பவரது மகன் கூலித்தொழிலாளியான மணிகண்டன் (28) மற்றும் அதே ஊரை சேர்ந்த சின்னதேவாதி என்பவரது மகன் பிட்டரான கவுதம் (29) ஆகிேயார் மட்டும் நின்று ெகாண்டிருந்தனர். அப்போது திடீரென்று சமுதாய நலக்கூடத்தின் முன்புறமுள்ள மேற்கூரை பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
3 பேர் பலி
இந்த இடிபாடுகளுக்குள் முரளிராஜா, மணிகண்டன், கவுதம் ஆகிய 3 பேரும் சிக்கிக்கொண்டு அபயக்குரல் எழுப்பினார்கள. உடனே அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்க மேற்கூரையை அகற்ற முயன்றனர். ஆனால் அதிக எடையுள்ளதாக இருந்ததால் அவர்களால் தூக்க முடியவில்லை. இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மேற்கூரையை அகற்றினர். அப்போது உள்ளே சிக்கி உடல் நசுங்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த முரளிராஜா, கவுதம், மணிகண்டன் ஆகிய 3 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களின் உடல் பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் இறந்தவரிகளின் உறவினர்கள் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு அவர்களின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது பார்ப்போரின் மனதை உருக்குவதாக இருந்தது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இடித்த அகற்ற உத்தரவு
மேலும் சம்பவ இடத்தில் ஏராளமானவர்கள் திரண்டதால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.மேலும் பழமையான அந்த சாவடியை உடனடியாக இடித்து அகற்ற உத்தரவிட்டார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வந்த ஆறுதல் கூறினர்.
பலியான முரளி ராஜாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மணிகண்டனுக்கு அடுத்த மாதம் திருமணம் செய்வதற்காக நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. கவுதமிற்கு திருமணமாகவில்லை. மழைக்கு ஒதுங்கிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஊர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன.
-