தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

மேல்மலையனூர் அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேல்மலையனூர்
பூட்டை உடைத்து
மேல்மலையனூர் அருகே கன்னலம், இரும்புலி ஆகிய கிராமங்களில் மர்ம நபர்கள் வீடுகளில் பூட்டை உடைத்தும், கத்தியை காட்டி மிரட்டியும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். எனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் இதுகுறித்து வளத்தி போலீசார் வழககுப் பதிவு செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
3 பேர் கைது
இந்த நிலையில் நேற்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அன்னமங்கலம் கூட்டு சாலையில் நின்றிருந்த 3 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா பூங்குணம் கிராமத்தை சேர்ந்த கலியன் மகன் ரமேஷ்(வயது 51), காட்டுக்கூடலூர் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் பெருமாள்(25) காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகன் தமிழ்ச்செல்வன்(25) என்பதும், கன்னலம், இரும்புலி ஆகிய கிராமங்களில் வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.