3 பேருக்கு ஆயுள் தண்டனை
திருப்பூரில் ஆம்புலன்ஸ் டிரைவர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
ஆம்புலன்ஸ் டிரைவர் கொலை
திருப்பூர் பாலாஜிநகர் முத்தனம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவருடைய மகன் விக்னேஷ். இவர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி அருகில் தனியார் ஆம்புலன்சில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் விக்னேசுக்கும் மற்றொரு ஆம்புலன்ஸ் உரிமையாளரான முருகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம்தேதி முருகன்(49) மற்றும் அவருடைய நண்பர்களான அசோக்குமார்(25), காட்டுராஜா (30)ஆகியோர் சேர்ந்து விக்னேஷை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
3 பேருக்கு ஆயுள்தண்டனை
இந்த கொலை தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து முருகன், அசோக்குமார், காட்டுராஜா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன், கொலை வழக்கில் குற்றவாளிகளான முருகன், அசோக்குமார், காட்டு ராஜா ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.