வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை பதுக்கிய 3 போலீஸ் ஏட்டுகள் பணியிடை நீக்கம்


வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை பதுக்கிய 3 போலீஸ் ஏட்டுகள் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 4 Sep 2023 6:45 PM GMT (Updated: 4 Sep 2023 6:45 PM GMT)

வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை பதுக்கிய 3 போலீஸ் ஏட்டுகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில், இன்ஸ்பெக்டர் ராபின்சன் ஆகியோர் கடந்த 2-ந்தேதி இரவு கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள சோதனைச்சாவடியில் 80 மதுபாட்டில்கள் இருந்தது. அதுசம்பந்தமாக விசாரித்ததில் அந்த மதுபாட்டில்கள் கணக்கில் வராத மதுபாட்டில்கள் என்பதும், அங்கு பணியாற்றி வரும் போலீஸ் ஏட்டுகளான வினோத், முரளி, முத்தரசன் ஆகிய 3 பேரும் வாகன சோதனையின்போது கைப்பற்றிய 80 மதுபாட்டில்களை சம்பந்தப்பட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்காமல் தங்கள் வசம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

3 பேர் பணியிடை நீக்கம்

மேலும் மதுபானங்களை கடத்திச் சென்ற குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்காமலும், அவர்கள் வந்த வாகனங்களை பறிமுதல் செய்யாமலும் பணம் கையூட்டு பெற்றுக்கொண்டு அவர்கள் கடத்திச்சென்ற மதுபானங்களில் சிலவற்றை வாங்கி தங்கள் வசம் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸ் ஏட்டுகள் வினோத், முரளி, முத்தரசன் ஆகிய 3 பேர் மீதான விசாரணை அறிக்கையை துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்பி வைத்தார். இதன் அடிப்படையில் வினோத், முரளி, முத்தரசன் ஆகிய 3 பேரையும் துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவிட்டுள்ளார்.


Next Story