பிரியாணி கடை உரிமையாளரிடம் பணம் பறிக்க முயன்ற 3 ரவுடிகள் கைது


பிரியாணி கடை உரிமையாளரிடம் பணம் பறிக்க முயன்ற 3 ரவுடிகள் கைது
x

பிரியாணி கடை உரிமையாளரிடம் பணம் பறிக்க முயன்ற 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

மலைக்கோட்டை:

திருச்சி சிந்தாமணி வெனீஸ் தெருவை சேர்ந்த எட்வர்டு மகன் ஜோஸ்வாஸ்(வயது 24). இவர் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகம் எதிரே தள்ளுவண்டி கடையில் பிரியாணி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு வந்த 3 பேர் மது குடிக்க ஆயிரம் ரூபாய் கொடுக்குமாறு, ஜோஸ்வாசிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணம் தர மறுத்ததால், 3 பேரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து, பணத்தை பறிக்க முயன்றனர். இதனால் அவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்ததால் 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து ஜோஸ்வாஸ் கோட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் பணத்தை பறிக்க முயன்றது ஜீவா நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த சுரேஷ் என்ற கோலி சுரேஷ் (38), கீழ தேவதானம் வீரமுத்து நகரை சேர்ந்த ஆண்ட்ரூஸ் (30), மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்த சையது முஸ்தபா (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு கத்தியை கைப்பற்றினர். அவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும், அவர்கள் 3 பேரும் ரவுடிகள் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story