டெம்போவில் கடத்தி வந்த 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆரல்வாய்மொழி அருகே டெம்போவில் கடத்தி வந்த 3½ டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே டெம்போவில் கடத்தி வந்த 3½ டன் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீவிர சோதனை
நெல்லையில் இருந்து குமரி மாவட்டம் வழியாக வாகனங்களில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. இதை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பிரண்டு கார்த்திக் ராஜா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கலா தலைமையிலான போலீசார் ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரம் 4 வழிச்சாலை சந்திப்பு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
3½ டன் ரேஷன் அரிசி
அப்போது நெல்லையில் இருந்து வேகமாக வந்த ஒரு டெம்போவை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் டெம்போவில் இருந்த ஒருவர் இறங்கி தப்பியோடி விட்டார். உடனே போலீசார் சுதாரித்துக் கொண்டு டெம்போவில் இருந்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து போலீசார் டெம்போவை சோதனை செய்ததில் பிளாஸ்டிக் மூடைகளில் 3½ டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து டெம்போவுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
மேலும், டெம்போ டிரைவரான பனச்சமூடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது28) மற்றும் தேவிகோடு அருகே செர்வல்லூரை சேர்ந்த சஜீத்(31) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தப்பியோடியவர் மேல்புறம் அருகே தேவிகோடு பகுதியை சேர்ந்த சுனில் என்பதும், அவர் மூலம் ரேஷன் அரிசியை நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை கோணத்தில் உள்ள அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சுனிலை தேடி வருகிறார்கள்.