3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-3 பெண்கள் உள்பட 4 பேர் கைது
ஜோலார்பேட்டை அருகே மாந்தோப்பில் போலீசார் சோதனை நடத்தி வெளிமாநிலத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து 3 பெண்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே மாந்தோப்பில் போலீசார் சோதனை நடத்தி வெளிமாநிலத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து 3 பெண்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
மாந்தோப்பில் சோதனை
ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையம் அருகே வெளிமாநிலத்துக்கு ரெயில் மூலம் கடத்துவதற்காக மாந்தோப்பில் ரேஷன்அரிசி பதுக்கப்பட்டிருப்பதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி, புஷ்பா மற்றும் போலீசார் நேற்று காலை 5 மணிக்கு அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது போலீசார் வருவதைக் கண்ட 9 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டிச்சென்று 4 பேரை பிடித்தனர். அதன்பின் மாந்தோப்பில் சோதனை நடத்தியபோது 60 சிறிய மூட்டைகளில் 3 டன் ரேஷன்அரிசி பதுக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.விசாரணையில் பிடிபட்டவர்கள் வாணியம்பாடி அருகே பழைய வாணியம்பாடி பகுதியை சேர்ந்த பழனி மனைவி சுகப்பிரியா (வயது 40), வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த பழனி மகன் கோவிந்தராஜ் (வயது 19), நாட்டறம்பள்ளி அடுத்த புள்ளானேரி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மனைவி சூர்யா (வயது 21), வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்த மோகன் மனைவி முனியம்மாள் (வயது 54) என்பது தெரிய வந்தது. 4 பேரையும் கைது செய்த போலீசார் 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர்.கைதானவர்களையும் பறிமுதல் செய்த மோட்டார்சைக்கிளையும் திருப்பத்தூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.
மேலும் 5 பேர்
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தப்பி ஓடியவர்கள் நாட்டறம்பள்ளி கோனேரிகுப்பம் பகுதியைச் ராஜா மகன் சூர்யா ( 26), கோனேரிகுப்பம் பகுதியைச் சேர்ந்த நெப்போலியன், ஆர்ம்ஸ்ட்ராங், வெற்றி, விஜயா ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.