பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல் மின் நிலையத்தை 3 கிராம மக்கள் மீண்டும் முற்றுகை


பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல் மின் நிலையத்தை 3 கிராம மக்கள் மீண்டும் முற்றுகை
x

பரங்கிப்பேட்டை அருகே தனியார் அனல் மின் நிலையத்தை 3 கிராம மக்கள் மீண்டும் முற்றுகையிட்டனர்.

கடலூர்

பரங்கிப்பேட்டை,

பரங்கிப்பேட்டை அருகே பஞ்சங்குப்பம் கிராமத்தில் தனியார் அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இதில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கக்கோரி கடந்த வாரம் கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தனியார் அனல் மின் நிலைய நிர்வாகம், உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் ஒருவாரம் ஆகியும் அவர்களுக்கு வேலை வழங்கவில்லை.

இந்த நிலையில் பஞ்சங்குப்பம், கரிக்குப்பம், தோப்பிருப்பு ஆகிய 3 கிராம மக்கள் வேலை கேட்டு நேற்று காலை தனியார் அனல் மின் நிலையத்தை மீண்டும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

20-ந் தேதி பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) நாகராஜன் மற்றும் பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கிராம மக்கள், உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறினர். அதற்கு போலீசார், அனல்மின் நிலைய உயர் அதிகாரிகள் வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை)பேச்சுவார்த்தை நடத்தி உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு 3 கிராம மக்களும் கலைந்து சென்றனர்.


Next Story