அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் 3 கிராமமக்கள் அவதி


அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் 3 கிராமமக்கள் அவதி
x

கல்வராயன்மலையில் மழையில் அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலம் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் 3 கிராமமக்கள் அவதி மேம்பாலம் கட்டித்தர கோரிக்கை

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலையில் சேராப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட தும்பராம்பட்டு, தாழ்தும்பராம்பட்டு, காட்டுக்கொட்டாய் ஆகிய 3 கிராமங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமமக்கள் வெளியே சென்று வர வசதியாக அங்குள்ள மாரியம்மன் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த பாலம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பெய்த மழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் 3 கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் ஆத்திர அவசரத்துக்காக வெளியே சென்று வர மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த கிராமமக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களையும் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே புதிதாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, தரைப்பாலம் மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் நாங்கள் கிராமத்தை விட்டு வெளியே சென்று வர மிகவும் அவதிப்படுகிறோம். பிள்ளைகள் பள்ளி, கல்லூரிக்கு சென்று வரவும் மிகவும் சிரமப்படுகின்றனர். ரேஷன் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், பால்வண்டிகள் கூட எங்கள் கிராமத்துக்கு வந்து செல்ல முடியாததால் நாங்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் எங்கள் கிராமத்துக்கு செல்ல மாரியம்மன் ஆற்றின் குறுக்கே புதிதாக மேம்பாலம் அமைத்துதர வேண்டும் என்றனர்.


Next Story