மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள்
மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள் பாரதிமோகன் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது
குத்தாலம்:
தரங்கம்பாடி தாலுகா மேலபெரம்பூர் பெரிய தெருவைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. மாற்றுத்திறனாளி. இவருடைய மனைவி பிரேமா. காது கேளாதவர். இந்த நிலையில் மாற்றுத்திறனாளி பொன்னுச்சாமி பெரம்பூர் கடை வீதியில் வேலைக்கு செல்லும்போது அடிக்கடி கீழே விழுந்துள்ளார். அந்த வழியாக சென்ற பெரம்பூர் பாரதி மோகன் அறக்கட்டளை நிறுவனர் எஸ்.பாரதிமோகன் அதனைக் கண்டு அவருக்கு முதலுதவி அளித்து அவரது நிலைமை அறிந்தார். பின்னர் பொன்னுச்சாமிக்கு ஏதாவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர் வேலைக்கு சென்று வர பாரதிமோகன் அறக்கட்டளை சார்பில் மூன்று சக்கர சைக்கிள் வழங்க ஏற்பாடு செய்தனர். இதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சியில் பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி பொன்னுச்சாமிக்கு 3 சக்கர சைக்கிளை வழங்கினார். இதில் பெரம்பூர் பாரதிமோகன் அறக்கட்டளை நிறுவனர் எஸ்.பாரதிமோகன் மற்றும் நிர்வாகிகள், பெரம்பூர் போலீசார், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். பாரதி மோகன் அறக்கட்டளைக்கு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பொன்னுசாமி குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.