அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய 3 பெண்கள் கைது ; அடைக்கலம் கொடுத்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை


அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய 3 பெண்கள் கைது ; அடைக்கலம் கொடுத்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை
x

மதுரை விமான நிலைய பகுதியில் அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அடைக்கலம் கொடுத்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

மதுரை:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வந்தபோது தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.அப்போது தி.மு.க.-பா.ஜனதாவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

அஞ்சலி செலுத்தி விட்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தி செருப்பு வீசி எறிந்தனர். அதில் அமைச்சர் கார் மீது தாக்கிய வழக்கில் முதல் கட்டமாக பா.ஜ.க.வினர் 7 பேரை அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் முன்னாள் மதுரை மாவட்ட பா.ஜ.க.தலைவர் டாக்டர் சரவணன், துணைத்தலைவர் மனோகரன் உள்ளிட்ட பா.ஜ..க நிர்வாகிகள் 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் அமைச்சர் கார் மீது செருப்பை வீசிய பெண் குறித்தும் அவர்களுடன் வந்தவர்கள் குறித்தும் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சீனிவாச பெருமாள், தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் மற்றும் பெண் போலீசார் கொண்ட தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

போலீசார் அங்கு பதிவான வீடியோ காட்சிகள் மூலம் அந்த பெண்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று 3 பெண்கள் உள்பட 5 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தெய்வானை, சரண்யா, தனலட்சுமி ஆகிய 3 பேர் தான் செருப்பு வீசி சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்தது. அதை தொடர்ந்து பெண் போலீசார் அந்த 3 பெண்களையும் கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண் ஒருவருக்கு மதுரை ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர் அடைக்கலம் கொடுத்து உதவி செய்ததாக கூறப்படுகிறது. அவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய சம்பவம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.


Next Story