தொழிலாளியை திட்டி தாக்கியவருக்கு 3 ஆண்டு சிறை
சாதி பெயரை சொல்லி தொழிலாளியை திட்டி தாக்கியவருக்கு 3 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா பொய்க்குணம் புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் பிச்சைக்காரன் மகன் முனுசாமி(வயது 37), தொழிலாளியான இவர் கடந்த 2006-ம் ஆண்டில் புதுப்பாலப்பட்டு கிராமத்தில் தங்கராசு என்பவரின் நிலத்தில் தொழிலாளர்களுடன் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள தென்னை மரத்தில் இருந்து விழுந்த தேங்காயை தொழிலாளர்கள் உடைத்து சாப்பிட்டனர். இதை தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட பிரச்சினையில் ஆத்திரம் அடைந்த தங்கராசும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து முனுசாமியை சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தையால் திட்டி தாக்கினர்.
பின்னர் இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார், எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தங்கராசு உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட தங்கராசுவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும், மற்ற 16 பேரை விடுதலை செய்தும் நீதிபதி பாக்கியஜோதி உத்தரவிட்டார்.