வணிகவரித்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் வணிகவரித்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கொங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 40), வியாபாரி. இவருடைய கடைக்கு டின் நம்பர் மற்றும் ஜி.எஸ்.டி. எண் வாங்குவதற்கு கடந்த 2016-ம் ஆண்டு அப்போதைய திருக்கோவிலூர் வணிகவரித்துறை அதிகாரி தவமணி(45) என்பவரை அணுகினார். அதற்கு அவர், ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து பாண்டியன், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தவமணியை போலீசார், கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, அவர் துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி(பொறுப்பு) புஷ்பராணி, லஞ்சம் வாங்கிய தவமணிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.