கொத்தடிமையாக தொழிலாளர்களை வைத்திருந்தால் 3 ஆண்டு சிறை தண்டனை
கொத்தடிமையாக தொழிலாளர்களை வைத்திருந்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஊட்டியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.
ஊட்டி
கொத்தடிமையாக தொழிலாளர்களை வைத்திருந்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஊட்டியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 9-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதன்படி நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தலின்படி குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) சதீஸ்குமார் தலைமையில் கொத்தடிமை முறை ஒழிப்பு தொடர்பாக ஊட்டி, குன்னூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் நிகழ்ச்சி நடத்தி உறுதிமொழி எடுத்தல், கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்து விளக்குதல், துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தல், பதாகைகள் வைத்தல் மற்றும் சுவரொட்டி ஒட்டுதல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிறை தண்டனை
ஊட்டியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஸ்குமார் கூறியதாவது:-
கொத்தடிமை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் பணிக்கு அமர்த்திய உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது பற்றிய புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 18004252650 மற்றும் அவசர உதவிக்கு மாவட்ட கலெக்டர், சப்-கலெக்டர், ஆர்.டி.ஓ., தொழிலாளர் உதவி ஆணையர், மாவட்ட மற்றும் கோட்ட அளவிலான கண்காணிப்பு குழுவினர், போலீசாரை அணுகலாம்.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் கொத்தடிைம தொழிலாளர் முறை எங்கும் இல்லை. அது தொடர்பான கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தொழிலாளர் துணை ஆய்வாளர் வெங்கடாசலம், உதவி ஆய்வாளர்கள் கிருஷ்ணவேணி, விக்கிரமாதித்தன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.