டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை


டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
x

லாரி மோதி 2 பக்தர்கள் பலியான வழக்கில் டிரைவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கரூர்

லாரி மோதி 2 பேர் பலி

கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் விழா கடந்த 2011-ம் ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. அப்போது இதனை பார்ப்பதற்காக ஏராளமான பக்தர்கள் கரூர் ஜவகர் பஜார் கடைவீதியில் இருந்து அமராவதி ஆற்றங்கரை வரை திரண்டி இருந்தனர்.

அப்போது அவ்வழியாக குடிபோதையில் கரூர் திருக்காம்புலியூரை சேர்ந்த செல்வக்கனி (வயது 42) என்பவர் ஓட்டி வந்த லாரி பக்தர்களின் கூட்டத்திற்குள் புகுந்து அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில், 2 பக்தர்கள் உயிர் இழந்தனர். 3 பேர் படுகாயமும், 5 பேர் லேசான காயமும் அடைந்தனர். இதுகுறித்து கரூர் நகர போலீசார் வழக்குப்பதிந்து, செல்வக்கனியை கைது செய்தனர்.

3 ஆண்டு சிறை

இது தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையடுத்து இந்த வழக்கிற்கான தீர்ப்பை நீதிபதி ராஜலிங்கம் நேற்று வழங்கினர். அதில், 2 பேர் உயிரிழந்ததற்காக தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், 3 பேருக்கு படுகாயம் ஏற்படுத்தியதற்காக தலா 4 மாத சிறை தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும், 5 பேருக்கு லேசான காயம் ஏற்படுத்தியதற்காக தலா ரூ.500 வீதம் என ரூ.2,500 அபாராதமும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். ஏககாலத்தில் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் அதிகபட்ச தண்டனையான 3 ஆண்டு சிறை தண்டனையை செல்வக்கனி அனுபவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story