ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம்: தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட திருவள்ளூரை சேர்ந்த தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம்,
சிறுமியிடம் சில்மிஷம்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவிற்குட்பட்ட கோவில் பதகை அருகே உள்ள பூம்புழல் நகர் சாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 45). தொழிலாளி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ந்தேதி சென்னையில் இருந்து கோவைக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்தார். நள்ளிரவில் சேலம் அருகே ரெயில் வந்து கொண்டிருந்தது.
அப்போது அவரது பக்கத்தில் பெற்றோருடன் பயணம் செய்த 16 வயது சிறுமியிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சேலம் ரெயில்வே போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மகேஷ்வரனை கைது செய்தனர்.
சிறை தண்டனை
இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி ஓடும் ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மகேஷ்வரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.