போலீசாரை தரக்குறைவாக பேசியதாக 3 வாலிபர்கள் கைது
போலீசாரை தரக்குறைவாக பேசியதாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சமயபுரம்:
சிறுகனூர் அருகே பெருவளப்பூரில் நேற்று முன்தினம் சப்பரம் திருவிழா நடைபெற்றது. இதைமுன்னிட்டு சிறுகனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவிழாவில் சிலர் நடனமாடியதாக கூறப்படுகிறது. இதை அந்த ஊரை சேர்ந்த சிலர் போலீசாரிடம், அவர்களை கண்டிக்குமாறு கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறுகனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் 2 போலீசார் அந்த நபர்களிடம் திருவிழா அமைதியாக நடக்க வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த நபர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசாரை அதே ஊரை சேர்ந்த சூர்யா (வயது 21), அவருடைய நண்பர்கள் திருச்சி பீமநகரை சேர்ந்த பிரதாப் (21), கல்கண்டார் கோட்டையை சேர்ந்த கோபால்சாமி (21) ஆகிய 3 பேரும் தரக்குறைவாக பேசி உள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். இந்நிலையில், போலீசார் அத்துமீறி நடந்து கொள்கின்றனர் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பெருவளப்பூரை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 16 பேர் சிறுகனூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதாக பெருவளப்பூரை சேர்ந்த மோகன் உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.