ஊராட்சிக்கு சொந்தமான மின்மோட்டாரில் தாமிர கம்பிகள் திருடிய 3 வாலிபர்கள் கைது
ஊராட்சிக்கு சொந்தமான மின்மோட்டாரில் இருந்த தாமிர கம்பிகள் திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நெய்வேலி,
மந்தாரக்குப்பத்தை அடுத்த வடக்குசேப்ளாநத்தம் ஊராட்சியை சேர்ந்தவர் குமாரசாமி(வயது 52). இவர் அதே ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டர் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அதிகாலை 4 மணிக்கு குமாரசாமி குடிநீர் தொட்டியில் நீர் ஏற்றுவதற்காக மின்மோட்டாரை இயக்க சென்றபோது அங்கு 3 மர்ம நபர்கள் மோட்டாரில் இருந்த தாமிர கம்பிகளை திருடிக்கொண்டிருந்ததை பார்த்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்து 3 மர்ம நபர்களையும் பிடித்து மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் நெய்வேலி 1-வது வட்டத்தை சேர்ந்த நடராஜ் மகன் பார்த்திபன்(வயது 20), வடலூர் பார்வதிபுரம் பகுதி ஜெயராமன் மகன் தேவா(22), ராமன் மகன் சஞ்சய்குமார்(23) என்பதும், ஊராட்சிக்கு சொந்தமான மின் மோட்டாரில் இருந்து தாமிர கம்பிகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து பார்த்திபன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.