திருட்டு வழக்கில் 3 வாலிபர்கள் கைது
கே.வி.குப்பம் அருகே திருட்டு வழக்கில் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் மருந்து கடையில் பணிபுரியும் இளம்பெண்ணிடமும், கே.வி.குப்பம் சந்தை மேட்டில் நடந்து சென்ற கல்லூரி மாணவி ஒருவரிடமும், ஹெல்மெட் அணிந்த மர்ம ஆசாமிகள் இருச்சக்கர வாகனத்தில் சென்று செல்போன்களை பறித்து சென்றனர்.
வடுகந்தாங்கல் பகுதியில் மோட்டார்சைக்கிளையும் மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், கே.வி.குப்பம் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், நேற்று கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை செய்துகொண்டு இருந்தனர்.
அப்போது, ஒரே மோட்டார்சைக்கிளில் பைக்கில் சென்ற 3 பேரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் செதுவாலை பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது21), பிரேம் நாத் (22), கோகுல் (21) என்பதும், மேற்கண்ட 3 வழக்குகளிலும் தொடர்புடையதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.