பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தேடப்பட்ட 3 வாலிபர்கள் கைது


பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தேடப்பட்ட 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 22 April 2023 6:45 PM GMT (Updated: 22 April 2023 6:47 PM GMT)

விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 3 வாலிபர்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்

விழுப்புரம்

விக்கிரவாண்டி

மாணவருக்கு கத்திகுத்து

விக்கிரவாண்டி தாலுகாவை சேர்ந்த 17 வயது மாணவன், மாணவி இருவரும் சிந்தாமணியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். காதலர்களான இவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி அந்த பகுதியில் உள்ள கப்பியாம்புலியூர் ஏரிக்கரையோரம் உள்ள கருவேல முள்வேலி பகுதியில் தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் மாணவனை கத்தியால் குத்தி அவர்களிடம் இருந்த 2 செல்போன்கள், வெள்ளிகொலுசு, மோதிரம் ஆகியவற்றை பறித்தனர். பின்னர் அவர்களில் ஒருவன் மாணவியை பாலியல் தொந்தரவு செய்தான். இதைப்பார்த்த அவரது காதலன் கூச்சலிடவே மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

போலீசார் தேடுதல் வேட்டை

இது குறித்து மாணவர் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் 8 தனிப்படைகள் அமைத்து தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். ஆனால் போலீசாரின் தேடுதல் வேட்டையில் மர்ம நபர்களை பற்றிய எந்து ஒரு துப்பும் துலங்கவில்லை.

மேலும் மாணவன், மாணவியிடம் இருந்து மர்ம நபர்கள் பறித்துச்சென்ற செல்போன் நம்பரை வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஆனால் அந்த செல்போன்கள் சுவிட்ச் ஆப் ஆகி இருந்ததால் சிக்னல் கிடைக்கவில்லை.

3 பேர் சிக்கினர்

இந்நிலையில் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட மாணவியின் செல்போன் ஆன் ஆகி இருந்ததால் சிக்னல் மூலம் செல்போன் இருந்த இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். இதன் மூலம் கோலியனூர் அருகே உள்ள குச்சிபாளையத்தை சேர்ந்த கவியரசன்(வயது 23), அபி என்கிற அபினேஷ்(23), அன்பு(22) ஆகிய 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.தொடர்ந்து அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் மாணவரை தாக்கியதையும், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் நகைகளை பறித்துச்சென்றதையும் ஒப்புக்கொண்டனர். மேலும் இது போன்று கப்பியாம்புலியூர் ஏரிக்கரைக்கு தனியாக வரும் ஜோடிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததோடு, வழிப்பறியில் ஈடுபட்டதும் மேற்படி விசாரணையில் தெரியவந்தது.

போக்சோ சட்டத்தில் கைது

இதையடுத்து அபினேஷ் உள்ளிட்ட 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 வாலிபர்களும் 2 மாதத்துக்கு பிறகு சிக்கியதால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.


Next Story