குன்னூரில் 30 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது: வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன
குன்னூரில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு 30 செ.மீ. மழை பதிவானது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது.
குன்னூர், பர்லியார், அருவங்காடு, வண்டிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக குன்னூரில் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டன.
மண் சரிவு
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை மரப்பாலம் பகுதியில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த மண்ணை அகற்றினர். இதேபோல் எல்லநல்லியில் 3 இடங்கள், இந்திரா நகர் உள்பட பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பலத்த காற்றுடன் நள்ளிரவில் மழை பெய்ததால் பிருந்தாவன் பள்ளி பகுதி, அருவங்காடு பால்கார லைன், இந்திரா நகர், வண்டிச்சோலை உள்ளிட்ட இடங்களில் 10 மரங்கள் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தன.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து குன்னூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலையின் குறுக்கே கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர். கனமழை காரணமாக குன்னூரில் சில பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன
குன்னூர் அரசு ஆஸ்பத்திரி வளாகம், உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்தன. பாரத்நகர் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்ததால், 5 இடங்களில் மண் சரிந்தது. இதனால் சில வீடுகள் சேதமானது. மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
கனமழை காரணமாக சாலை களில் வெள்ளம் ஆறுபோல் ஓடியது. வெலிங்டன் ஆரோக்கியபுரம், அம்பிகாபுரம், லூர்துபுரம், டி.டி.கே. சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோ, கார்கள் உள்பட 7 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதில் வாகனங்கள் சேதம் அடைந்தன. மழை குறைந்த பின்னர் பொதுமக்கள் உதவியுடன் வாகனங்கள் மீட்கப்பட்டன.
24 வீடுகள் இடிந்தன
குன்னூர் அடுத்த லூர்துபுரம் பகுதியில் விளைநிலத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட் உள்ளிட்ட காய்கறிகள் சேதமடைந்தது. கனமழையால் குன்னூர் தாலுகாவில் ஒரே நாளில் 24 வீடுகள் ஒரு பகுதி இடிந்து விழுந்தன.
கனமழை காரணமாக நேற்று நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு இருந்தது.
குன்னூரில் 30 செ.மீ. மழை
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் 30 செ.மீ. கொட்டி தீர்த்துள்ளது.
ஒரே நாளில் 30 செ.மீ. பதிவானது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 22 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு அவலாஞ்சியில் ஒரே நாளில் 90 செ.மீ. மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.
மலை ரெயில் போக்குவரத்து ரத்து
கனமழை காரணமாக ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் வரை செல்லும் மலை ரெயில் பாதையில் 11 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் மரங்களும் முறிந்து விழுந்து கிடந்தது. இவற்றை அகற்றும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் சேவை இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.