மக்காச்சோள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்


மக்காச்சோள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்
x

பெரம்பலூர் மாவட்டத்தில் படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் அரசு வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

பெரம்பலூர்

தேவையான உரங்கள்

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் (பொறுப்பு) அங்கையற்கண்ணி தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் பேசுகையில், கூட்டுறவுத்துறை மூலம் தகுதியுடைய அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரீப், ராபி ஆகிய பருவங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் விவசாயிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைனில் முறையாக பதிவு செய்த நிலப்பட்டாக்களை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மற்ற மாவட்டங்களைபோல் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட் உட்பட்ட கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் ஆண்டு கடனாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

கரும்புக்கு ஊக்கத்தொகை

அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் நீலகண்டன் பேசுகையில், இயற்கையான முறையில் உரம் தயாரிப்பதற்கு வேளாண்மைத்துறை மூலம் பயிற்சி அளிக்க வேண்டும், என்றார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் பேசுகையில், கரும்பிற்கு அறிவிக்கப்பட்ட ஊக்க தொகையினை தீபாவளி பண்டிகைக்கு முன்பு விவசாயிகளுக்கு விரைந்து வழங்க சர்க்கரை துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்லத்துரை பேசுகையில், மாவட்டத்தில் பற்றாக்குறையாக நிலவும் யூரியா உரங்கள் போதிய அளவு விவசாயிகளுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பால் கொள்முதல் விலை

அமெரிக்கன் படைப்புழு தாக்குதலுக்கு உள்ளான மக்காச்சோள பயிர்களுக்கு ஒரே நேரத்தில் வேளாண்மை துறை மூலம் இலவசமாக டிரோன் மூலம் மருந்து தெளிக்க வேண்டும். தோட்டக்கலைத்துறை மூலம் பெற்ற விவசாய மின் இணைப்பிற்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி உற்பத்தியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை வளர்ப்போர்க்கு மத்திய அரசின் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை அதிகரிக்க வேண்டும், என்றார். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பேசுகையில், பருத்தி, மக்காச்சோளத்துக்கு அரசு அறிவித்த குறைந்த பட்ச ஆதார விலைக்கு அதிகமாக வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். இதனை கண்காணிக்க வேண்டும்.

தனியாருக்கு...

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்ற வேண்டும். 2021-22 நிதி ஆண்டில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு காப்பீடு தொகை பெற்று தர வேண்டும். மாவட்டத்தில் அமெரிக்கன் படைபுழுக்காளல் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு ஏக்கருக்கு நிவாரண தொகையாக விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் அரசு வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் செயல்படும் நேரடி கொள்முதல் நிலையங்களை தனியாருக்கு மாற்றும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், என்றார்.இதில் வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பூவலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story