பண்ணையாளர்களுக்கு ரூ.300 கோடி இழப்பு
கறிக்கோழி விலை தொடர் சரிவை சந்தித்து வருவதால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பண்ணையாளர்களுக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
தொடர் சரிவு
தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.) தினசரி நிர்ணயம் செய்கிறது.
அதன்படி கடந்த கடந்த 1-ந் தேதி கொள்முதல் விலை ஒரு கிலோவுக்கு ரூ.92 என நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து இறக்கம் கண்டு வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.12 குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
ரூ.300 கோடி இழப்பு
இது குறித்து கறிக்கோழி உற்பத்தியாளரும், தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவருமான வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-
கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து விலையை குறைத்தே பண்ணைகளில், கோழிகளை பிடிக்கின்றனர். இதனால் தினசரி ரூ.11 கோடி வீதம், ஒரு வாரத்துக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்படுகிறது. ஒரு கிலோ கோழி உற்பத்தி செய்வதற்கு ரூ.90 முதல் ரூ.100 வரை செலவாகிறது. உற்பத்தி செலவை விட குறைத்தே விற்பனை செய்வதால், பண்ணையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
கொள்முதல் விலையில் இருந்து சராசரியாக ரூ.10 குறைத்தே கோழிகளை பிடிக்கின்றனர். எனவே இந்த மாதம் மட்டும் ரூ.300 கோடி பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. கோழிப்பண்ணைத் தொழிலை காப்பாற்ற, தமிழக அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு, விலையை நிர்ணயம் செய்து தரவேண்டும். பண்ணையாளர்களை அழைத்து பேசி, உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.