தடை செய்யப்பட்ட 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


தடை செய்யப்பட்ட 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 4 Aug 2023 7:45 PM GMT (Updated: 4 Aug 2023 7:45 PM GMT)

திண்டுக்கல்லில், தடை செய்யப்பட்ட 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திண்டுக்கல்

திடீர் சோதனை

திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து நகர் பகுதியில் உள்ள கடைகள், பிளாஸ்டிக் மொத்த விற்பனை கடைகளில் திடீர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.

அதன்படி பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார் பகுதிகளில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். மொத்தம் 13 கடைகளில் அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் 3 கடைகளில் 3 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புகை பிடித்தவர்கள்

அதேபோல் பஸ் நிலைய பகுதியில் புகை பிடித்த 10-க் கும் மேற்பட்டோரை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர். மேலும் புகையிலைப்பொருட்கள் விற்ற கடைக்காரர்கள், பஸ் நிலையத்தில் புகை பிடித்தவர்கள் ஆகியோரிடம் இருந்து ரூ.4 ஆயிரத்து 800 அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதன் பின்னர் மேற்குரத வீதியில் செயல்படும் பிளாஸ்டிக் மொத்த விற்பனை கடையில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள், கேரி பேக்குகள் என மொத்தம் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்தால் கடையை பூட்டி 'சீல்' வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story