300 பேர் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை
300 பேர் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.
சுதந்திர தினத்தையொட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை தொடர்ந்து 3 மணி நேரம் சுற்றி சாதனை படைக்கும் நிகழ்ச்சி திருச்சி, தில்லைநகரில் உள்ள ஒரு பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் சிலம்பத்தில் சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பதக்கங்களை பெற்றுள்ள வீராங்கனை சுகிதா உள்பட 300-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு 3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். பாரம்பரியம் காப்போம் என்ற உறுதி மொழியுடன் காலை 6.30 மணிக்கு தொடங்கி 9.30 மணி வரை நடந்த இந்த நிகழ்ச்சியை உலக சிலம்ப இளையோர் சம்மேளன தலைவர் மோகன் தொடங்கி வைத்தார். 3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றியதை துபாயை சேர்ந்த கார்த்திக்குமார் மற்றும் மோனிகா ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்தனர். சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் சாதனை நிகழ்ச்சியின்போது, வறுமையில் வாடும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா என்ற கபடி வீராங்கனைக்கு, அவரின் மேல் படிப்பிற்காக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது.