இடை நின்ற 300 மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு


இடை நின்ற 300 மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடை நின்ற 300 மாணவர்கள் பளளியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

ஆய்வுக்கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து நடப்பாண்டில் பள்ளிகளில் சேர்த்து தேர்வு எழுதவைப்பது, அரசு தொடர்பான வழக்குகளில் வாதாட நியமனம் செய்யப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்களுக்கு வழக்குகள் தொடர்பான ஆவணங்களை உரிய முறையில் வழங்கி ஒத்துழைப்பு வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

300 பேர் பள்ளியில் சேர்ப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. இப்பணிகளில் 340 ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணியினை செய்து வருகின்றனர்.

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 2,832 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களை நடப்பாண்டில் பள்ளியில் சேர்த்து தேர்வு எழுதவைக்க, ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இது வரையில் சுமார் 300 பள்ளி செல்லா குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேலைக்கு செல்வது குற்றம்

பள்ளி செல்லும் அனைத்து மாணவ- மாணவிகளும் 12-ம் வகுப்பு வரை படிக்க வேண்டும். ஆகையால் இந்த இடைநிற்றல் மாணவ -மாணவிகளை பள்ளியில் சேர்க்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதிகப்படியான மாணவர்கள் 10-ம் வகுப்பு முடித்த பின்பு வேலைக்கு செல்கின்றனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வேலைக்கு செல்ல வேண்டும். 18 வயது நிரம்பாத குழந்தைகள் வேலைக்கு செல்வது சட்டப்படி குற்றமாகும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கீழமை கோர்டுகளில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு கடந்த ஓராண்டு காலமாக பணிபுரிந்து வருகின்றார்கள். அரசு தொடர்பான வழக்குகளை அரசு அலுவலர்கள் சார்பாக வாதாட நியமனம் செய்யப்பட்டுள்ள அரசு வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை கோரும் போது உடனுக்குடண் வழங்குவது மட்டுமில்லாமல், வழக்கு தொடர்பான நன்கு விவரம் தெரிந்த அலுவலர்களுக்கு பொறுப்பை ஒப்படைத்து வளர்ச்சி தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பார்வைக்கு கொண்டுவர ேவண்டும்

அரசு வழக்குகளில் வெற்றி ஈட்டித்தர அனைத்து அரசு வழக்கறிஞர்களும் சிறப்பான முறையில் வாதாட வேண்டும். ஏதேனும் அலுவலகத்திலோ அல்லது அரசு வழக்கறிஞரிடமோ போதிய ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தால் அது குறித்த தகவல்களை உடனுக்குடன் தன்னுடைய பார்வைக்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story