கடலூரில் 11 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-3 ஏ தேர்வு 3,092 பேர் எழுதவில்லை
கடலூரில் 11 மையங்களில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-3 ஏ தேர்வை 3,092 பேர் எழுதவில்லை.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் அடங்கிய கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர், தொழில் மற்றும் வர்த்தகத்துறை பண்டக காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. இதில் மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இந்த தேர்வுக்காக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 5,620 பேர் விண்ணப்பித்தனர். இந்நிலையில் குரூப்-3 ஏ தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்காக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்களுக்கு கடலூர் நகரில் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் பள்ளி உள்பட 11 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது.
3,092 பேர் எழுதவில்லை
இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் 11 தேர்வு மையங்களிலும் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. இதையடுத்து காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. இதற்காக தேர்வர்கள் காலை 8 மணிக்கே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். பின்னர் அனைவரும் பலத்த சோதனைக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வு மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இத்தேர்வை 2,528 பேர் எழுதினர். 3,092 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும், சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தேர்வர்களும் தேர்வு மையங்களுக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.