312 நீர்நிலைகளில் வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி


312 நீர்நிலைகளில் வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி
x

பெரம்பலூர் மாவட்டத்தில் 312 நீர்நிலைகளில் வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

வண்டல் மண்

தமிழக அரசின் 2021-22-ம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளவாறு நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 3 ஏரிகளும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஏரிகளும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 9 ஏரிகளும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஏரிகளும் என மொத்தம் 27 ஏரிகள் உள்ளன.

ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 84 ஏரிகளும், குளங்களும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 91 ஏரிகளும், குளங்களும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 63 ஏரிகளும், குளங்களும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஏரிகளும், குளங்களும், என மொத்தம் 285 ஏரிகள், குளங்கள் உள்ளன.

312 நீர்நிலைகள்

அரசு உத்தரவு மற்றும் கனிம விதிகளின்படி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் சொந்த உபயோகத்திற்காக மட்டும் வண்டல் மண், களிமண், கிராவல் மண் கனிமங்களை நஞ்சை நிலத்திற்கு, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டர் அல்லது 25 டிராக்டர் லோடுகள், புஞ்சை நிலத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடுகள், சொந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கனமீட்டர் அல்லது 10 டிராக்டர் லோடுகள் மற்றும் மண் பாண்டம் தயாரித்தல் பணிக்கு 60 கனமீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடுகள் என்ற அளவில் இலவசமாக எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அறிவிக்கை செய்யப்பட்டுள்ள 312 நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண், களிமண், கிராவல் மண் எடுத்து கொள்ள அங்கீகரிக்கப்பட்ட மண் பரிசோதனை கூடம், கல்வி நிறுவன ஆய்வகத்தில் இருந்து பெறப்பட்ட மண் பரிசோதனை அறிக்கையுடன் பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்று இலவசமாக மண் எடுத்து கொள்ளலாம்.

இதர தேவைகளுக்கு அனுமதியில்லை

மேற்படி விதியின் கீழ் வண்டல் மண், களிமண், கிராவல் மண் எடுக்க வழங்கப்படும் அனுமதியானது வீட்டு உபயோக மற்றும் வேளாண் நோக்கத்திற்கு நீங்கலாக இதர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி இல்லை. மேற்படி விதிகளின் கீழ் மண் எடுக்க அனுமதி பெற மாவட்ட கலெக்டர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரிக்கு விண்ணப்பித்து விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story