கடந்த 3 மாதங்களில் ரெயில்களில் ஓசி பயணம்:31,475 பேருக்கு ரூ.2½ கோடி அபராதம்சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை
கடந்த 3 மாதங்களில் ரெயில்களில் ஓசி பயணம்:31,475 பேருக்கு ரூ.2½ கோடி அபராதம் சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்
சூரமங்கலம்
சேலம் ரெயில்வே கோட்டத்தில் கடந்த 3 மாதங்களில் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் செய்த 31 ஆயிரத்து 475 பேருக்கு ரூ.2½ கோடி அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு உள்ளது.
தொடர் சோதனை
சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சேலம் கோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை 3 மாதங்களில் நடந்த இந்த சோதனையில், ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் செய்த 31 ஆயிரத்து 475 பேர் சிக்கினர். அவர்களிடமிருந்து ரூ.2 கோடியே 43 லட்சத்து 9 ஆயிரத்து 875 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் விதிமுறைகளை மீறி ரெயிலில் பயணம் செய்த 16 ஆயிரத்து 515 பிடிபட்டனர். இவர்களிடமிருந்து ரூ.83 லட்சத்து 59 ஆயிரத்து 362 அபராதம் வசூலிக்கப்பட்டது, மேலும் ரெயில்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக கூடுதலான லக்கேஜ் கொண்டு சென்ற வகையில் வகையில் 105 பேர் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து ரூ.55 ஆயிரத்து 283 அபராதம் வசூலிக்கப்பட்டது.
ரூ.5¼ கோடி அபராதம்
அதன்படி கடந்த 3 மாதங்களில் மொத்தம் 10 ஆயிரத்து 93 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் ரூ.5 கோடியே 27 லட்சத்து 24 ஆயிரத்து 520 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இது குறித்து சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:-
ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது, விதிகளை முறைகளை மீறி இருக்கைகளில் பயணம் செய்வது, மேலும் ரெயில்களில் அனுமதிக்கப்பட்ட லக்கேஜ்க்கு அதிகமாக கொண்டு செல்வது உள்ளிட்டவைகள் ரெயில்வே சட்டப்படி குற்றமாகும். எனவே பயணிகள் ரெயில் விதிமுறைகளை கடைபிடித்து பயணம் செய்ய வேண்டும். அவ்வாறு விதிமுறைகளை மீறும் பட்சத்தில், அபராதம் விதிக்கப்படும். எனவே ரெயில் பயணிகள் ரெயில்வே துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து பயணம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.