விநாயகர் சதுர்த்தி விழா;318 சிலைகள் பிரதிஷ்டை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதியில் நேற்று பல்வேறு அமைப்புகள் சார்பில் 318 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா
முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியில் அவதரித்த நாளே விநாயகர் சதுர்த்தியாக பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தன்று மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது.
அந்த வகையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உடுமலைப்பகுதி விழாக்கோலம் பூண்டது. நேற்று முன்தினம் இரவே பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவற்றுக்கு நேற்று காலை முறைப்படி பூஜை நடத்தப்பட்டது. அத்துடன் விநாயகர் கோவில்கள் வாழைமரம், மாவிலை தோரணங்கள் கட்டியும், வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அப்போது விநாயகருக்கு பிடித்த உணவான மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், லட்டு, பழங்களை படைத்து விநாயகர் பாடல்களை பாடி பயபக்தியுடன் வழிபாடு செய்தனர்.
சிறப்பு அபிஷேகம்
அத்துடன் புதிதாக ஆங்காங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டனர். அதன்படி உடுமலையில் பிரசித்தி பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகர் தரிசனம் செய்தார் அத்துடன் வீடுகளிலும் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
318 சிலைகள் பிரதிஷ்டை
உடுமலை உட்கோட்ட போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், குமரலிங்கம், தளி, அமராவதி, கணியூர் போலீஸ் சரக பகுதியில் இந்து முன்னணி சார்பில் 199 சிலைகளும், இந்து மக்கள் கட்சி சார்பில் 27 சிலைகளும், இந்து சாம்ராஜ்ய மக்கள் இயக்கத்தின் சார்பில் 8 சிலைகளும், ஹரியான ஜனநாயக முன்னணி சார்பில் 9 சிலைகளும், இந்து மக்கள் கட்சி (அனுமன் சேனா) சார்பில் 5 சிலைகளும், சிவசேனா சார்பில் 8 சிலைகளும், பொதுமக்கள் சார்பில் 62 சிலைகளும் ஆக மொத்தம் 318 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.
இவை சிறப்பு பூஜைக்கு பின்பு இன்று(செவ்வாய்) மற்றும் நாளை (புதன்கிழமை) நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெ.சுகுமாரன் தலைமையிலான போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.